விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சோதனையிட வந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்களை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சிறை வைத்தனர். போலீசார் வந்து அனைவரையும் மீட்டனர். ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டில் சரியாக விளைச்சல் இல்லாததால் பருவம் தவறிய நிலையில் தாமதமாக மாங்காய் சந்தைக்கு வரத்து கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செல்வராஜ், மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜா முத்து, மற்றும் கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜபாளையம் ஏ. கே. டி. தினசரி சந்தையில் சோதனையிட வந்தனர். மாம்பழ குடோன் ஒன்றை சோதனையிட்ட போது அங்கு ரசாயன பொருட்களை கண்டறிந்து அதை பயன்படுத்தக் கூடாது என கூறி அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்வதற்கு வாகனங்களை தயார் செய்தனர்.
இதற்கு வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். முடிவில் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்ததால் அதிகாரிகளை கடைக்குள்ளேயே சிறை வைத்தனர். தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர். அரசு ஊழியர்களை வேலையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை தாக்க முயற்சித்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசாயனம் கலந்த மாம்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மூத்த மருத்துவர் போஸ் நம்மிடம் கூறியதாவது, எத்திலீன், கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், போன்ற ரசாயனங்கள் கலந்து பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப் படுகின்றன. கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள்,கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், வாந்தி போன்றவை உண்டாகும் என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.