Home /local-news /

இன்றைய விருதுநகர் மாவட்ட முக்கிய செய்திகள்.!

இன்றைய விருதுநகர் மாவட்ட முக்கிய செய்திகள்.!

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

விருது நகர் மாவட்டத்தில் நடந்த இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!

    1.12-ஆண்டுகளுக்கு பின்பு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா-கிராம பொதுமக்கள் உற்சாகம்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்பு சுமார் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் பிரம்மாண்டமான மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டு மீன் பிடித்து சென்றனர்.

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் உள்ள 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.

    சுமார் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான கம்பிக்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் மீன்பிடி திருவிழாவில் மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், அச்சங்குளம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் மீன்படி திருவிழா கோலகலமாக நடைபெற்றது.

    12-ஆண்டுகளுக்கு பின்பு பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. முதலில் கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிட்டு பூஜை செய்து கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் ஒவ்வொருத்தர் வலையில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், தேன் கெழுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன.

    2.மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நகர்மன்ற கவுன்சிலர்கள் குவியும் பாராட்டு

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 4, 5 ,6 வது வார்டு (திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மரம் வளர்ப்பது குறித்தும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 4 வது 5வது 6வது வார்டு பகுதிகளில் வீட்டுக்கு மரம் வளர்க்க வேண்டும் என தமிழக அரசு வலியுத்தி வந்து நிலையில் அதனை கடைப்பிடித்து கோடை காலத்தில் காத்திரி வெயில் இருந்த கார்த்துக் கொள்வேண்டும் என வற்புறுத்தி பொதுமக்கள் இயற்கை காற்று சுவாசித்து வந்தனர். அது போல் தற்போது இள தலைமுறையானார் மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நினைவூட்டும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என வற்புறுத்தி திமுக நகரமன்ற உறுப்பினர்கள் ஜோதி முருகன் (4வது வார்டு ) ஞானபிரபா ( 5 வது வார்டு)மணி முருகன் (6வது வார்டு) வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் நாட்டு வளம் காப்போம் திட்டத்தின் கீழ் வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலி அமைத்து மரக்கன்று நட்டு பேணி பராமரித்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு வீடு வீடாக சென்று நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

    3.பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி சார்பில் இரவு 7 மணிக்கு மேல்கடை கோவிலில் இருந்து அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது.

    ரதவீதியில் வலம் வரும் சமயத்தில் கேரள பாரம்பரியமிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், பைரவி, தத்ரூப காட்சிகள் சிறப்பு ஒலி -ஒளியுடன் கூடிய அழகுரதங்கள் முன்செல்ல பத்ரகாளி அம்மன் நகர்வலம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்குமாறு காளீஸ்வரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் நிர்வாகத்தின் சார்பில் விஜய்டிவி சூப்பர் சிங்கர் புகழ் பரத் & ரக்சிதா பங்கேற்கும் லட்சுமணன் சுருதியின் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி இரவு 10 மணிக்கு சிவகாசி இந்துநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

    4. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு- நாளை வேலைவாய்ப்பு முகாம்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை (6-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    இந்த முகாமில் 10 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வர்களை விருதுநகர், சிவகாசி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் நாளை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    5.விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகை

    விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை ஒத்திகைநிகழ்ச்சி ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் நடந்தது. ஒத்திகை நிகழ்ச்சிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றிய ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் நடந்தது. இதில் தீ விபத்தின் போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை எவ்வாறு எவ்வித உபகரணங்களும் இல்லாமல் மீட்பது. ஏணிகள், கயிறுகள் மூலம் நோயாளிகளை மீட்பது. தீ விபத்துக்களின் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகட்ட தீயணைக்கும் முறைகள் செய்து காட்டப்பட்டது.

    தீயணைப்பு மீட்பு பணி துறை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விரிவுரைகள் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூலம் வழங்கப்பட்டது.இதுபோன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் மீட்பு பணி துறையுடன் இணைந்து செயல்பட உதவியாக இருக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்.

    6.ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

    காரியாபட்டி அருகே ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளுக்கு மட்டும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வீடுகள் தோறும் குடிநீர் பைப் இணைக்கப்பட்டு வந்துள்ளது.
    அதில் மக்களின் பங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்புக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையை கேட்டுள்ளனர். குடிநீர் இணைப்புக்கான மக்கள் பங்களிப்பு தொகை தரவில்லை என்றால் உங்களுக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்க மாட்டோம் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எங்களைக் கேட்காமல் எங்கள் வீட்டில் பைப் லைன் பதித்து அதற்கு கட்டண தொகை கேட்பதாகவும், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை தரமறுப்பதாகவும் கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் வலுக்கலொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லாங்கிணறு போலீசார் மற்றும் காரியாபட்டி ஊராட்சி யூனியன் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    7. சட்ட விதிகளை மீறி பட்டாசு தயாரித்த நபர் மீது வழக்குப் பதிவு

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்ட விதிகளை மீறி பட்டாசு தயாரித்த நபர் மீது போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ் மற்றும் போலீசார் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆலையில் அரசு விதிகளை மீறி அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பட்டாசு ஆலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Karthick S
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி