ஹோம் /Local News /

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்.!

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்.!

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்.!

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :

  1. ரூ 20,000 மதிப்புடைய 10 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்-போலீஸ் அதிரடி

  விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள ரூபாய் 20,000 மதிப்புடைய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

  விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது பாளையம்பட்டி ராஜீவ்நகரில் பலசரக்கு கடை அருகே கையில் பையுடன் சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (61) என்பதும் பையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 10 கிலோ எடை கொண்ட ரூ 20,000 மதிப்புடைய புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக அன்பழகனை கைது செய்தனர்.

  2.மியாவாக்கி அடர்வனக்காடுகள் உருவாக்கம்-மரக்கன்றுகள் நடும் பணிதுவக்கம்

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மியாவாக்கி அடர்வனக்காடுகள் அமைக்கும் முயற்ச்சியாக நகராட்சி கலவை உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணியினை நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தில் நகராட்சி கலவை உரக்கிடங்கை சுற்றி நகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மியாவாக்கி அடர்வனக்காடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் அடர்வனக்காடுகள் அமைக்கும் திட்டத்தினை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.முதல் கட்டமாக மருதம், நாவல், மலைவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுமார் 2500 க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி,முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.மேலும் விரைவில் 2500 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து நம்மிடம் பேசிய நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், மியாவாக்கி முறை என்பது சிறிய இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்த்த ஆகும்.இதன் மூலம் அதிகளவு ஆக்சிசன் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு,இயற்கை காற்று ஆகிய உருவாக்கவே இக்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.நூறு ஆண்டுகளில் உருவாகும் காடுகள் வெறும் 10 ஆண்டுகளில் உருவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

  3. மனைவி மாயம் கணவன் புகார்-போலீசார் தீவிர விசாரணைை

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மனைவி மாயமானதை தொடர்ந்து கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரைத் தொடர்ந்து போலீசார் காணாமல் போன பெண்மணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  ராஜபாளையம் அருகே உள்ள அசையா மணிவிலக்கு பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடில் அமைத்து சரவணன் (வயது31)என்பவர் ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பர்வக்கொடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தங்கி இருந்தனர்.

  இந்த நிலையில் சரவணனின் மனைவி திடீரென மாயமாகி விட்டார் .அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் ,தனது மனைவி மாயமானது பற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

  4. பைக் மீது லாரி மோதி விபத்து-தொழிலதிபர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலதிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் அருண் (வயது 32 )தொழில் அதிபர். இவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

  எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், லாரியின் பின்பகுதியில் மோதி அருண் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இதுபற்றி கோவையை சேர்ந்த லாரி டிரைவர் சுவாமிநாதன் ராஜ பாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  5. கண்மாய் தலைவருக்கான தேர்தல்-விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கண்மாய் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட பிளவக்கல் நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது.

  வத்திராயிருப்பு தாலுகாவை பொருத்தவரை மொத்தம் உள்ள 20 சங்கங்களில் 14 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 சங்கங்களுக்கான தலைவர் மற்றும் மண்டல பொறுப்பா ளர்கள் தேர்தல் நடந்தது.

  இந்த தேர்தல் வத்திரா யிருப்பு பெரியகுளம், விராக சமுத்திரம், கொசவன்குளம், அனுப்பன்குளம், வில்வராயன் குளம், பாதரங்குளம், சித்தாறு, நத்தம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கான தேர்தல் கான்சாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபு ரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடந்தது.

  இந்த தேர்தல் பொதுத்தேர்தலை போன்று வாக்குச் சாவடிகள் அமைத்து நடைபெற்றது. விவசாயிகள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.வயதானவர்களை ஆட்டோவில் அழைத்து வந்தும், நடக்க முடியாத முதியவர்களை தூக்கி வந்தும் வாக்களிக்க செய்தனர்.

  6. திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் நோய் பரவும் அபாயம்

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 20க்கும் மேற்பட்ட டீக்கடைகள்,10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஜார் பகுதி எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

  இங்கிருந்துதான் கூமாபட்டி, கான்சாபுரம் ,நெடுங்குளம், மகாரா ஜபுரம், அழகாபுரி, பேரையூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களு க்கு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்கள் பிரிந்து செல்கிறது.

  பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப்பொருட்கள் திறந்தவெளியில் வைத்து விற்கப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமில்லாமல், பஜார் பகுதியில் வழியாக செல்லும் வாகனங்கள் மூலமாக உருவாகும் தூசிகள் உணவுப்பொருட்களில் படிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

  இதனால் பொதுமக்க ளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்

  உள்ளதாகவும், பேக்கரிகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஜார் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, டீ கடைகளில் திறந்தவெளியில் உள்ள உணவுப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  7. மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய மாவட்ட ஆட்சியர்

  விருதுநகர் மீசலூர் கிராமத்தில் உள்ள சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் செயல்பட்டு வரும் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்” பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு செய்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார்.

  நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடை வெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை யினுடைய கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் இணையதள வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு கடந்த கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தையினுடைய ஆரம்ப கால கட்ட கல்வி வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அந்த ஆரம்ப காலகட்ட கல்வி வளர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டால் அது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும்.

  இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், தன்னார்வலர் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவது குறித்தும், மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்தேன். விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 3695 மையங்களில் 3658 தன்னார்வலர்கள் மூலமாக 72044 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

  மாணவர்கள் தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு எவ்வளவு தோல்வி வந்தாலும் தளராமல் முயற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

  செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

  Published by:Karthick S
  First published:

  Tags: Virudhunagar