Home /local-news /

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய (07.05.22) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் 

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய (07.05.22) முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் 

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 07.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    1. ரெய்டுக்கு போன உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகள்-பெரும் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சோதனையிட வந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்களை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சிறை வைத்தனர். போலீசார் வந்து அனைவரையும் மீட்டனர். ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டில் சரியாக விளைச்சல் இல்லாததால் பருவம் தவறிய நிலையில் தாமதமாக மாங்காய் சந்தைக்கு வரத்து கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செல்வராஜ், மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜா முத்து, மற்றும் கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜபாளையம் ஏ. கே. டி. தினசரி சந்தையில் சோதனையிட வந்தனர். மாம்பழ குடோன் ஒன்றை சோதனையிட்ட போது அங்கு ரசாயன பொருட்களை கண்டறிந்து அதை பயன்படுத்தக் கூடாது என கூறி அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்வதற்கு வாகனங்களை தயார் செய்தனர்.

    இதற்கு வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். முடிவில் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்ததால் அதிகாரிகளை கடைக்குள்ளேயே சிறை வைத்தனர். தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர். அரசு ஊழியர்களை வேலையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை தாக்க முயற்சித்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2. ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ரெய்டு-ஊழியர்கள் பெரும் ஷாக்

    ஷவர்மா சாப்பிட்ட கேரள மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஷவர்மா இறைச்சி உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஃபாஸ்ட் புட் ஜங்க் புட் உணவான ஷவர்மா சாப்பிட்ட 15 வயதான கேரள மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு அபராதம் விதிப்பது ஓடு மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பாளையம்பட்டி பகுதியிலுள்ள தனியார் உணவகம், எஸ்.பி.கே பள்ளி அருகே உள்ள தனியார் உணவகங்கள் 5-ஐந்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகமது இஸ்மாயில் காசிம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    உணவகம் முன் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி மூலம் செய்யப்பட்ட ஷர்மாவை உணவு பாதுகாப்பு அதிகாரி தீவிரமாக பரிசோதித்தார். அதன்பின்பு கடை ஊழியர்களிடம் இறைச்சிகளை முறையாக பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும் என்றும் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதேபோல் நகரிலுள்ள 5க்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனை நடத்தினார். உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்ட உணவுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு உடனடியாக பூட்டி சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    3. கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்-போலீசார் தேடுதல் வேட்டை

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மணல் மாபியா கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டராய புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு இருந்தபோது வேண்டராயபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், கதிரேசன், சந்தனகுமார் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் மணல் அள்ள குழி தோண்டி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சென்ற வெங்கடசாமி, ஏன் அரசு புறம்போக்கு நிலத்தில்மணல் அள்ளுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வெங்கடசாமியை ஜே.சி.பி. எந்திரத்தை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து வெங்கடசாமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஈஸ்வரன், சந்திரகுமார் ஆகியோர்களை தேடி வருகின்றனர்.

    4. பட்டா வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு

    விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு புறம்போக்கு நிலத்திற்கு குடி மனை பட்டா வீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் குடிமனைப்பட்டா மற்றும் குடியிருக்க வீடு கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெறும் என மாநிலக்குழு அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

    புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து புதிய மனை பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கி குடியிருப்போருக்கு வீட்டை சொந்தமாக்க வேண்டும். சொத்து மதிப்புக்கான பணத்தை அரசே கோவில்களுக்கு செலுத்த வேண்டும். சொந்த நிலமோ, வீடோ இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு வீட்டு மனையும் வீடும் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், லட்சுமி, சுந்தரபாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    5. கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி அருகே சேனையாபுரம் காலனியை சேர்ந்த அரவிந்தன் (வயது28) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் 10 பேரை கைது செய்தனர். இதில் அருண்பாண்டியன் (31), பார்த்திபன் (32), மாரீஸ்வரன் (26) ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் மேகநாதரெட்டி அருண் பாண்டியன் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் மேற்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    6. அகழாய்வில் எலும்புகள் கண்டெடுப்பு

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருேக அகழாய்வில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. ஐந்து அகழாய்வு குழிகள் இதுவரை தோண்டப்பட்டுள்ளன. இதில் தற்போது 12 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது.

    6-வது புதிய அகழாய்வு குழி தோண்டப்பட்டது. இந்த அகழாய்வு குழி மையத்தில் இருப்பதால் ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக ஆண்கள் புகை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள், வீட்டில் தரையை சமப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பாறைகள் கண்டெடுக்கப்பட்டன. கண்ணாடி பாசி மணிசுடுமண்ணால் ஆன கிண்ணங்கள், மிகுந்த வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தீப விளக்குகள், வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கருவிகளை தயார் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், சுடுமண்ணால் ஆன காதணிகள், கண்ணாடி பாசி மணிகள், தாயக் கட்டைகள் ஆகியவை கிடைந்தன. உடைந்த மண் ஓடுகள், எலும்புகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. மேலும் இன்னும் சில அடி தோண்டப்பட்டால் வீட்டின் சுவர்கள் இருந்ததற்கான அடையாளம் தெரிய வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை மறுநாள் மேலும் ஒரு அகழாய்வு குழி தோண்டுவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    7. ரயில்வே தேர்வுக்காக நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்

    ரயில்வே தேர்வுக்காக நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 10.10மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக 8-ந் தேதி இரவு 11.55 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இதேபோன்று 10-ந் தேதி இரவு 8:15மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ெரயில் 11-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. மேற்கண்ட தகவலை தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி