Home /local-news /

மாணவர்களுடன் கலந்துரையாடிய விஞ்ஞானி.. பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

மாணவர்களுடன் கலந்துரையாடிய விஞ்ஞானி.. பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Virudhunagar District Headlines Today | இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

    இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் ஒரு சில வரிகளில்..

    பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு பணியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


    அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசுப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துபாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் எளிமையான முறையில் ஆபத்தில் சிக்கியவர்களை தூக்கிச் செல்வது குறித்தும் மாணவர்களுக்கு செய்து காண்பித்ததோடு மாணவர்களுக்கும் பயிற்ச்சி அளித்தனர்.

    நாளை வேலைவாய்ப்பு முகாம்-விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், பெண்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    தனியார் வேலைவாய்ப்பு முகாமில் நான்கு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையோர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் எல்ஐசி நிறுவனத்தின் மூலமாக 30 வயது முதல் 45 வரை உள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வார்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக அதற்கான இணையதளத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய் கண்டெடுப்பு

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண் பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.
    இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடபட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்தற்பொழுது சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    2,000 ம் ஆண்டு பழமையான சங்க காலத்து வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிப்பு

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தின் கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியில் சங்க காலத்து வடிகுழாயுடன் கூடிய உறைக்கிணற்றை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் மறையூர் கிராமத்தையடுத்த நெடுகனேந்தல் பகுதியை சேர்ந்தவர்களான அக்னீஸ்வரன், யோகபிரகாஷ், தனுஷ்பாபு, ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான ஸ்ரீதர்,தாமரைக்கண்ணன் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருதுமால் நதியின் கிழக்கு பகுதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியின் மேற்பரப்பை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் செய்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.
    மேலும் இந்த சங்க காலத்து உறைக்கிணறு குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கூறுகையில் நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள கிருதுமால் நதிக்கரையின் மேற்பரப்பு பகுதியை தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வுகள் செய்த போது அங்கு கிடைத்த கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான ஓடுகள்,விளிம்பு பகுதிகள்,அதனுடைய பிற பாகங்களை வைத்து பார்க்கும்பொழுது சுமார் 2,000 ம் ஆண்டுகளுக்கு முன்பு கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியின் நீர்நிலை பகுதியான கரையின் மேற்பரப்பு பகுதியில் சங்க காலத்து மக்கள் வாழ்ந்து உள்ளதாக கூறுகின்றனர்.

    மாங்காய் விளைச்சல்- விவசாயிகள் கவலை

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய எப்படித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான கான்சாபுரம், அத்தி கோவில், கூமாபட்டி, நெடுங்குளம், பிளவக்கல் அணை, கொடிக்குளம், தாணிப்பாறை, மாவூத்து, மாத்தூர், புதுப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மா சாகுபடி செய்து இருந்தனர். தற்போது இங்கு மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மாணவ மாணவிகளுடன் அணு விஞ்ஞானி கலந்துரையாடல்

    விருதுநகரில் பள்ளி மாணவர்களுடன் அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா கலந்துரையாடினார் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் மாணவ-மாணவிகளிைடயே அறிவியல் கற்பதால் ஏற்படும் மகிழ்ச்சி என்பது குறித்து மூத்த அணுவிஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா விளக்க உரையாற்றினார். மாணவ-மாணவிகளின் பல்வேறு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். மேலும் ஈடுபாட்டுடன் அறிவியல் பயில வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

    விருதுநகர் நோபல் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா மாணவிகளிடையே தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும் இயற்கை வளங்களை அழிப்பதால் மக்கள் படும் இன்னல்கள் குறித்தும், வருங்காலத்தில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

    பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயின் திருட்டு-போலீசார் விசாரணை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் 5 பவுன் தங்க நகை திருடு போனதால் அப்பெண்ணின் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் தாலுகா மேல உப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அழகு நாச்சியார் (35). இவர் தனது ஊரை சேர்ந்த காளீஸ்வரி தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் காரியாபட்டி கே.செவல்பட்டி அருகே உள்ள கபால காளி கோவில் கும்பாபிஷேகத்திற்கு பால்குடம் எடுத்துச்சென்றனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வேனில் வந்தனர். வீட்டில் சென்று பார்த்த போது தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அழகுநாச்சியார் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி