விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செம்பொன்நெறிஞ்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அரியநாச்சி அம்மன், கருப்பசாமி,அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி 21வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி அருகே செம்பொன்நெறிஞ்சி கிராமத்தில் அருள்மிகு அரியநாச்சி அம்மன்,அய்யனார், கருப்பண்ணசாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதேபோல் சுமார் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன் பதிவு செய்யப்பட்டன.
ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் ஜல்லிக்கட்டு காளைகள் களம் இறக்கப்பட்டன. வாடி வாசலில் ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ஆட்டுக்குட்டி, தங்க நாணயம், கட்டில், பேன், மிக்ஸி, கிரைண்டர், வெள்ளிக்குடம் அண்டா, உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அதேபோல் பிடிபடாத ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளூர் வெளியூர் பொதுமக்கள் பெருமளவு கண்டு ரசித்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மூன்று வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.