விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கில்நத்தம் நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சுக்கில்நத்தம் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இக்காலனியில் சுமார் 56க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வீடு வசதி இல்லாததால் தற்காலிக கூரை அமைத்து கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். மழை காலங்களில் நரிக்குறவர் இன மக்கள் வீடுகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதேபோல் பெண்கள் பயன்பெறும் வகையில் பொது கழிப்பிடம், குடிநீர் வசதி தெருவிளக்கு ,சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் பூச்சிகள் பாம்புகள் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் போகும் சூழல் உருவாகியுள்ளது.
முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. முறையான தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் பெண்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மதி லட்சுமி கூறியதாவது, கடந்த 35 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவியாய் தவித்து வருகிறோம் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நரிக்குறவ இன மக்களுக்கு வீடு கட்டித் தரவில்லை.
மேலும் பொதுக் கழிப்பறை குடிநீர் வசதி மின்விளக்கு வசதி சாலை வசதி ஏற்படுத்த வில்லை. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் விசாரணையை விட்டு வெளியேறி வெளியூரில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.