விருதுநகர் அருகே பழைய கட்டிடத்தை இடிக்கும் போது கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்ட ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் சுவர் திடீரென்று விழுந்து விபத்து:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தூங்கரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டில் மராமத்து பணிக்கான கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. இந்தப் பணிக்காக சுமார் 5-க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கட்டிட வேலை செய்தபொழுது வீட்டின் சுவர் திடீரென்று விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம். இதில், சுவர் இடிந்து விழுந்து அங்கு வேலை செய்த ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் தலையில் பலத்த காயமடைந்தார். மேலும் அவருடன் பணிபுரிந்த முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகநாத பாண்டியன்(46), கார்த்தி (22), மணிகண்டன் (26), ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.
உடனடியாக, 4 பேரையும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சேர்த்தனர். ஆனால், முருகன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை:-
தகவல் அறிந்து வந்த ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.