விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் விலக்கில் சாலையை கடக்க முயன்ற செம்மறி ஆடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரிடம் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (28) மற்றும் விக்னேஷ் (25) என்ற இரு சகோதரர்கள் கூலிக்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாத்தூர் அருகிலுள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைபோட்டு மேய்ச்சல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து ஏழாயிரம்பண்ணை செல்வதற்காக 350 ஆடுகளை ஓட்டிச் சென்றபோது உப்பத்தூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 40 ஆடுகள் பலியாயின. மேலும் 12 ஆடுகள் படுகாயம் அடைந்தது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.