பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி நாளை (மார்ச் 29) முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை நாளை முன்னிட்டு நாளை முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.