உக்ரைனில் உள்ளமருத்துவக் கல்லூரியில் படித்து வந்த ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர், பல்வேறு சிரமங்களுக்கிடையே சொந்த ஊரை வந்தடைந்துள்ளார். அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் பெருமாவளவன். இவர் உக்ரைனில் உள்ள லுகான்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் 5ம் ஆண்டு படித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷ்ய எல்லை அருகே இவர் தங்கியிருந்ததாகவும் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் மிகுந்த கஷ்டப்பட்டு நண்பர்கள் 6 பேர் சேர்ந்து தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பேசி 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹங்கேரி எல்லையில் உள்ள ஸோனி பகுதிக்கு வந்து சேர்ந்து, பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் தலைநகர் புடாபெஸ்ட் வந்து அங்கிருந்துதலைநகர் டெல்லி வந்து சேர்ந்தார்.
டெல்லியிலிருந்து சென்னை வழியாக தற்போது ராஜபாளையம் வந்து சேர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து அங்கிருந்து அரசு உதவியுடன் சென்னை வந்து சேர்ந்து தமிழக அரசு 6 பேரை காரில் அனுப்பி வைத்ததாக கூறினார்.
மேலும் பல மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும் உணவுக்கே வழியில்லாத நிலையில் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் அவர்களையும் விரைந்து முயற்சிகள் மேற்கொண்டு மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் பெருமாவளவன்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த மகன் பெருமாவளவனை, தந்தை பால்சாமி மற்றும் தாயார் சௌந்தரலதா ஆகியோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். டெல்லியில் இருந்து மீட்க உதவி செய்த தமிழக அரசிற்கும், மத்திய அரசுக்கும் பெருமாவளவன் நன்றி தெரிவித்துக்கொண்டார்
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.