விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் 42 பேர் பாதி சம்பளம் மட்டுமே தருவதாக கூறி, இன்று வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களாக 42 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள சுகாதார பணிகள் மற்றும் அடிப்படை சுகாதார வேலைகளை கடந்த 5 ஆண்டுகாலமாக பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சம்பளம் மாதம் ரூ. 8500 என ஒப்பந்தம் போடப்பட்டு 5 ஆண்டுகளாக ரூ.4500- மட்டுமே வழங்குவதாக பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மே 1ஆம் தேதி முதல் வேறு ஒப்பந்த நிறுவனம் வருவதால் சேமநலநிதி உள்பட பல்வேறு சலுகைகளை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 42 தொழிலாளர்களின் வேலையைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோஷமிட்டு போராட்டம் செய்தனர். விரைவில் இதற்கு தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையில் துப்புரவு பணிகளில் சற்று நேரம் தொய்வு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அவதியுற்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.