விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஒரு தரப்பினர் மறித்து சண்டையிடுவதாக கூறி மற்றொரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.
சாத்தூரை அடுத்துள்ள அமீர்பாளையம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஒரு சுடுகாடு மட்டுமே இருந்து வருகிறது. சுடுகாட்டிற்கு செல்லும் வழியானது மிகவும் குறுகலாகவும் சரியான சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் குறுகலான பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும்போது அருகிலுள்ள வீட்டினர் அடிக்கடி சண்டை இடுவது வழக்கம்.
அதேபோல் நேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை அவ்வழியே கொண்டு சென்றுள்ளனர். இப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் இரு வீட்டினர் ஊர்வலமாகச் சென்ற உறவினர்களின் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திருப்பித் தாக்கினால் ஜாதிப் பிரச்சினை உருவாகும் என்று நினைத்து உடலை அடக்கம் செய்த பின்பு அனைவருக்கும் பொதுவான பாதையில் எங்களுக்கும் செல்வதற்கு உரிமை உண்டு நாங்களும் மனிதர்கள் தான் எனவே எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாத்தூர் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
சாத்தூர் - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.