விருதுநகர் மாவட்டம் மண்டபசாலையில் வளர்ந்து வரும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அதிசயம் நிறைந்த பொந்தன்புளி மரத்தினை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை என்ற ஊரில் 1000 ஆண்டுகள் கண்ட பொந்தன்புளி மரம் உள்ளது. இதை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை கருப்ப சாமி கோவில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்குப்பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிர மாண்டமான ஒரு மரம் உள்ளது. அதன் மேல்பகுதி முறிந்து காணப்பட்டாலும், பழமையான இந்த மரம் தற்போதும் துளிர்விட்டு வளர்ந்து வருகிறது. இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளி வகைமரம் ஆகும். ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக்கூடிய பெரிய அளவிலான துவாரங்கள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள் ஆகும்.
ஓராண்டில் ஆறு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை ஆகும். தண்டுகளில் தண்ணீரை சேமித்து வைக்கிறது. மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளன. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இம்மரத்து தண்டின் நடுவில் பெரிய துவாரம் உருவாகியுள்ளது. இந்த மரத்தை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம் போன்ற கடற்கரையோர ஊர்களிலும், வணிக வழிப்பாதைகளிலும் இம்மரம் காணப்படுகிறது என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வரலாற்று உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது, வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் சங்ககாலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர். அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. கேரளாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப் பாதையில் அந்த ஊரிலும், தேரிருவேலி, அழகன்குளத்திலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. பொதுவாகவவே இது போன்ற மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்பே அதில் துவாரம் உண்டாகும். எனவே இந்த மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும் என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.