விருதுநகரைச் சேர்ந்த 22 வயதாகும் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி தனிமையில் இருக்கும் போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய விருதுநகர் மேலதெருவை சேர்ந்த ஹரிகரன், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அவரின் நண்பர்கள் 8 பேரை விருதுநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த 22 வயதாகும் அந்த இளம் பெண் கார்மெண்ட்ஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். விருதுநகர் மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 27). இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி அப்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரிஹரன் இளம்பெண்ணுடன் விருதுநகர் பெத்தனாட்சி நகரில் மெடிக்கல் குடோவுனில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரிடம் காண்பித்து மிரட்டி தனது நண்பர்களுடனும் தனிமையில் இருக்க நிர்பந்தப்படுத்தி உள்ளார் ஹரிஹரன்.
இதற்கு உடன்படாவிடில் அந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதற்கு பயந்த அந்தப் பெண் வேறு வழியின்றி நண்பர்களுடனும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று ஹரிஹரன் தொடர்ந்து மிரட்டி அப்பெண்ணை பணிய வைத்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் 18ம் தேதி வரை இது நடந்து வந்துள்ளது. அதன் பிறகு மேலும் சில நண்பர்களுடன் தனிமையில் இருக்க இளம்பெண்ணை, ஹரிஹரன் நிர்பந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள்:
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் காதலன் ஹரிஹரன் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி மாடசாமி (வயது 37), விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் பிரவீன் (22), விருதுநகர் செந்தி விநாயகபுரம் தெருவைச் சேர்ந்த ரைஸ் மில் நடத்தி வரும் ஜூனாத் அகமது (வயது 24), மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயின்று வரும் நான்கு மாணவர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.
நண்பர்களான இவர்கள் அனைவரும் அடிக்கடி பால்பண்ணையில் சந்தித்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் 8 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் போல விருதுநகரில் நடந்துள்ள சம்பவம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர வைப்பதாக உள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.