Home /local-news /

நம்மாழ்வார் பாணியில் இயற்கை வழியில் அசத்தும் விவசாயி.!

நம்மாழ்வார் பாணியில் இயற்கை வழியில் அசத்தும் விவசாயி.!

நம்மாழ்வார்

நம்மாழ்வார் பாணியில் இயற்கை வழியில் அசத்தும்  விவசாயி.!

மரக்கன்று வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதனை எவ்வாறு பராமரிப்பது அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்து வகையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன் என்றார்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் முதன் முறையாக பசுமை குடில் அமைத்து விவசாயி ஒருவர் இயற்கை முறையில் விவசாய நாற்றுகள் மற்றும் கன்றுகள், நாட்டு விதைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறார். மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் தலைமுறை தலைமுறைகளாக நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆத்திபட்டி பகுதியில் முதல் முறையாக பசுமை குடில் அமைத்து விவசாய நாற்றுகள் கன்றுகள் பண்ணை அமைத்துள்ளார்.

    இந்த பண்ணை மூலம் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை, தென்னை, நெல்லி, கொய்யா ,முருங்கை, மாதுளை, மற்றும் பனிப் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய முட்டைகோஸ், சப்போட்டா, காலிபிளவர், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பூக்கள் போன்ற பல்வேறு வகையான கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

    மேலும் இதே போல் செயற்கை உரங்கள் இன்றி இயற்கையாக கிடைக்கக் கூடிய உரங்களான மண்புழு உரம் ஆட்டுப்புழுக்கை உரம் ,பஞ்சகாவியா, தேங்காய் நார் கழிவு உரம் ஆகியவற்றை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு அறுவடை உள்ளிட்ட அனைத்து வகையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான மரக்கன்றுகள் மற்றும் கருவிகள் உள்ளவற்றை விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் இவரது இயற்கை பண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி அசோக் குமார் கூறியதாவது:\"தலைமுறை தலைமுறையாக என் முன்னோர்கள் வழியில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். தற்போது பொதுமக்கள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவசாய நாற்றுகள் மற்றும் கன்றுகளை மலிவு விலையில் விற்பனை செய்ததால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    தன்னிடம் மரக்கன்று வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதனை எவ்வாறு பராமரிப்பது அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்து வகையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன். பொதுமக்களும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். எனது நம்மாழ்வார் இயற்கை பண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது\" என்றார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி