விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மியாவாக்கி அடர்வனக்காடுகள் அமைக்கும் முயற்சியாக நகராட்சி கலவை உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணியினை நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தில் நகராட்சி கலவை உரக்கிடங்கை சுற்றி நகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மியாவாக்கி அடர்வனக்காடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அடர்வனக்காடுகள் அமைக்கும் திட்டத்தினை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். முதல் கட்டமாக மருதம், நாவல், மலைவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுமார் 2500 க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி,முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம்,நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.மேலும் விரைவில் 2500 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், மியாவாக்கி முறை என்பது சிறிய இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் முறை ஆகும்.இதன் மூலம் அதிகளவு ஆக்சிஜன், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, இயற்கை காற்று ஆகிய உருவாக்கவே இக்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.நூறு ஆண்டுகளில் உருவாகும் காடுகள் வெறும் 10 ஆண்டுகளில் உருவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.