விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் சன்னதியின் மூலக் கதவு தானாக திறக்கும் அதிசயத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி 8-ம் நாள் மாலையில் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொண்டனர்.
அதன் பின் சரியாக நள்ளிரவு 2 மணிக்கு ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அதன் பின்பு தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவு அடைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி வேப்பிலையைக் கையில் ஏந்தியபடி, அம்மனை மனதார வேண்டிக்கொண்டே உள்பிராகாரத்தை ஒருமுறை ஆத்மார்த்தமாக வலம் வந்தார்.
அம்மனை மனதில் வேண்டி வருந்திக் கையிலுள்ள தேங்காயை அர்த்தமண்டப வாசல்படியில் சிதறுகாய் உடைத்தார். பூசாரி சிதறுகாய் போட்டு உடைத்த மறுவிநாடியே, சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபக் கதவுகள் இரண்டும் தானாகத் திறந்தது.
இந்த அரிய காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கோயிலின் சன்னதியின் மூல கதவு தானாக திறக்கும் அதிசய நிகழ்வு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.