விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரே சமயத்தில் ரயில்வே மேம்பாலம், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக மதுரை திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் செல்வதற்காக இவ்வூர் வழியாக சென்று வருகின்றனர். இவ்வூருக்கு மாற்று வழி பாதை ஏதும் இல்லாத நிலையில், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் தென்காசி தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளன.
ராஜபாளையம் நகர மக்கள் இப்பாதையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் உள்பட பலரும் ஒரே பாதையைத் தான் பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளதால் முக்கியமான பாதைகளை கடந்து செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் விரைந்து முடிக்க முடியாத நிலையில் உள்ளனர். இன்னும் பல ஆண்டுகள் இந்த பணிகளை முடிப்பதற்காக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை விரைவில் முடிக்கவும், புறவழிச்சாலை ராஜபாளையம் நகருக்கு விரைவில் ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.