விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சாத்தூர் அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி வாசலில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏடிஎம்மில் திடீரென தீப்பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் இந்த வங்கி பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நல்லி கிளை என்பது தெரியவந்தது பின்னர் மேலாளரை தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். வங்கி மேலாளர் வந்த பின்புதான் அதில் பணம் எவ்வளவு இருந்தது என்பது குறித்து தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏசி இயங்கி வந்ததால் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.