புனித ஸ்தலங்களான காசி, இராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக திகழும்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பெயர் உருவாகிய காரணம் குறித்து விளக்குகிறது இந்த குறித்த செய்தி தொகுப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் புண்ணிய ஸ்தலமான பூமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும், மௌனமே அடையாளமாக திகழ்ந்த உலகம் போற்றிய ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி பிறந்த புண்ணிய பூமியும் இதுவாகும்.
சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை திரிசூலத்தினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த பாண்டிய மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற சிவபெருமானை வேண்டினார்.
இவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது திரிசூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால், "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்" ஆயிற்று என புராணங்கள் விவரிக்கிறன. நாளடைவில் திருச்சுழியல்- 'திருச்சுழி' என்று மாறி தற்போது பொதுமக்கள் அப்படியே பேச்சு வழக்கில் அழைத்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சுழி பூமிநாதர் திருக்கோயில் மூத்த பட்டர், ஹாலாஸ்யப்பட்டர் கூறியதாவது, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அமைந்துள்ள பூமிநாதர் கோவில் பாண்டி 16 திவ்யதேசங்களில் பத்தாவது புண்ணிய ஸ்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. பங்குனி மகம் நட்சத்திரத்தில் கெளதம அகலிகை சாபவிமோசனம் பெறும் இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பூமிநாதர் ஆகிய சிவனும் சகாய வள்ளி சிவன் பார்வதி இருவரும் திருமண கோலம் காட்சி அளித்தனர்.
காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக திருச்சுழியல் பூமிநாதர் திருக்கோயில் திருத்தலம் புவியியல் அமைப்பில் அமைந்துள்ளது. அதுபோல யோகியாக வாழ்ந்து ஜோதி வடிவில் ஐக்கியமான ரமண மகரிஷி பிறந்த சிறப்பு திருச்சுழிக்கு உள்ளது. ரமண மகரிஷி பிறந்த இல்லத்தை அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட வெளி நாட்டவர் பெரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர் என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.