விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோதனைச் சாவடி அருகே சேலத்திலிருந்து சங்கரன்கோவில் நோக்கிச் சென்று லாரியை மடக்கி சோதனையிட்டபோது ஒரு டன் குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. மனோகர் விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையம் வடக்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதுசமயம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்ற ஒரு வேனை மடக்கி சோதனையிட்டனர். அந்த வேன் சேலத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது.
லாரிக்குள் இருந்த பொருட்களை சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூடை மூடையாக சிக்கியது. அந்த மூடை அனைத்தும் ஒரு டன் இருக்கும் என தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் வடக்கு ஆய்வாளர் ராஜா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் மூவேந்தன், ஸ்டீபன் உள்பட காவல்துறையினர் உடனடியாக அதை ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் நேரில் வருகை தந்து, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
குட்கா பொருட்களை கடத்தி வந்த சேலத்தைச் சேர்ந்த ராஜா (21), கண்ணன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.