ஷவர்மா சாப்பிட்ட கேரள மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஷவர்மா இறைச்சி உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஃபாஸ்ட் புட் ஜங்க் புட் உணவான ஷவர்மா சாப்பிட்ட 15 வயதான கேரள மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு அபராதம் விதிப்பது ஓடு மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பாளையம்பட்டி பகுதியிலுள்ள தனியார் உணவகம், எஸ்.பி.கே பள்ளி அருகே உள்ள தனியார் உணவகங்கள் 5-ஐந்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகமது இஸ்மாயில் காசிம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உணவகம் முன் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி மூலம் செய்யப்பட்ட ஷர்மாவை உணவு பாதுகாப்பு அதிகாரி தீவிரமாக பரிசோதித்தார். அதன்பின்பு கடை ஊழியர்களிடம் இறைச்சிகளை முறையாக பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும் என்றும் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல் நகரிலுள்ள 5க்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனை நடத்தினார். உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்ட உணவுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு உடனடியாக பூட்டி சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.
ஷவர்மா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மருத்துவர் போஸ் நம்மிடம் கூறியதாவது, ஷவர்மாவில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், இது கற்றல் மற்றும் நினைவக உருவாக்கத்துடன் தொடர்புடைய மூளை செயல்பாடுகளை தடுத்து மூளை பெப்டைட்களுக்கு வழிவகுக்கும். இந்த விஷயங்கள் நினைவாற்றல் இழப்பு மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுப்பதோடு, மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. அதோடு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை (effects of eating shawarma) அதிகரிக்கும்.
ஷவர்மா போன்ற துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களின் பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. உடல் பருமன் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும். மேலும், இது எலும்புகளை பலவீனமாக்குகிறது.
ஷவர்மாவில் ஜிரோ கொலஸ்ட்ரால் உள்ளது, இது முக்கியமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
மேலும், ஷவர்மா சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஷவர்மாவில் கலோரிகளின் அளவு அதிகளவில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது சருமத்தில் முகப்பரு அதிகளவில் உருவாகவும் காரணமாக இருக்கிறது என்றார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.