விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முதல் மாநகராட்சி பெண் மேயராக திமுக சார்பில் 34வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சங்கீதா இன்பம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.திமுக சார்பில் துணை மேயராக விக்னேஷ் பிரியா பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிவகாசி மாநகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 12 பெண்கள், 12 ஆண்கள் என 24 பேர் மாமன்ற உறுப்பினர்களாக திமுக சார்பாக வெற்றி பெற்ற நிலையில், அதிமுக சார்பாக 7 பெண்கள்,4 ஆண்கள் என 11 பேர் மாமன்ற உறுப்பினர் களாக வெற்றி பெற்றிருந்த பட்சத்தில் 6 பெண்கள், 3 ஆண்கள் என9 மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.மற்றும் 4 சுயேட்சைகள்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மதிமுக சார்பில் தலா ஒரு மாமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 பெண்கள், ஒரே ஒரு ஆண் என 6பேர்களும் ,பாஜக சார்பாக ஒரே ஒரு மாமன்ற உறுப்பினரும் உள்ளனர்.
மொத்தம் உள்ள 48 மாமன்ற உறுப்பினர்களில் 39 பேர் திமுக மாமன்ற உறுப்பினர்களாக இருந்து அக்கட்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மையாக உள்ளது.
சிவகாசி மாநகராட்சி மேயர் வேட்பாளராக 34வது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா இன்பம் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதனடிப்படையில் மேயருக்காக நடந்த தேர்தலின்போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு சங்கீதா இன்பம் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மேயருக்கான அங்கி அணிந்து வந்த சங்கீதா இன்பத்தை வரவேற்று மேயர் நாற்காலியில் அமர செய்து வெள்ளியிலான செங்கோலை வழங்கினார். புதிய மேயராக பதவி ஏற்ற பின்பாக அவர் தனது மாமியார் பார்வதி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதையடுத்து ,மாமன்ற உறுப்பினர்களும் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ,நகராட்சி அலுவலர்களும் என பல்வேறு தரப்பினர் மேயர் பொறுப்பேற்ற சங்கீதா இன்பத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதேபோல் சிவகாசி மாநகராட்சியின் துணை மேயராக கவுன்சிலர்கள் ஒருமனதாக விக்னேஷ் பிரியாவை தேர்ந்தெடுக்க அவரும்பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற துணை மேயர் விக்னேஷ் பிரியாவுக்கு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.