Home /local-news /

கிருதுமால் ஆற்றுப்பகுதியில் 2,000 ஆண்டுகள் தொன்மையான உறை கிணறு கண்டுபிடிப்பு

கிருதுமால் ஆற்றுப்பகுதியில் 2,000 ஆண்டுகள் தொன்மையான உறை கிணறு கண்டுபிடிப்பு

உறைகிணறு

உறைகிணறு கண்டுபிடிப்பு

Virudhunagar Kiruthumal River | விருதுநகர் மாவட்டம்  நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தின் கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியில் சங்க காலத்து வடிகுழாயுடன் கூடிய உறைக்கிணற்றை கண்டுபிடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தின் கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியில் சங்க காலத்து வடிகுழாயுடன் கூடிய உறைக்கிணற்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    நரிக்குடி ஒன்றியம் மறையூர் கிராமத்தையடுத்த நெடுகனேந்தல் பகுதியை சேர்ந்தவர்களான அக்னீஸ்வரன், யோகபிரகாஷ், தனுஷ்பாபு, ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருதுமால் நதியின் கிழக்கு பகுதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியின் மேற்பரப்பை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் செய்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.

    மேலும் இந்த சங்க காலத்து உறைக்கிணறு குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கூறுகையில் நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள கிருதுமால் நதிக்கரையின் மேற்பரப்பு பகுதியை தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வுகள் செய்த போது அங்கு கிடைத்த கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான ஓடுகள்,விளிம்பு பகுதிகள்,அதனுடைய பிற பாகங்களை வைத்து பார்க்கும்பொழுது சுமார் 2,000 ம் ஆண்டுகளுக்கு முன்பு கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியின் நீர்நிலை பகுதியான கரையின் மேற்பரப்பு பகுதியில் சங்க காலத்து மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

    அப்போது தாங்கள் வாழ்வதற்கும், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உறைக்கிணறு அமைத்து. அதில் சிரமமின்றி நீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் வடிகுழாய் அமைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    மேலும் அங்கு கிடைத்த ஓடுகளின் தடிமன், அதன் வடிவமைப்பு, ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது தற்போது கண்டுபிடித்துள்ள உறைக்கிணறு மிகவும் தொன்மையானதெனவும்,ஒவ்வொரு உறைக்கிணறும் ஒன்றரை அடி உயரமும், இரண்டு இஞ்ச் தடிமனும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அதன் மேற்பகுதியானது குவிந்தும், அடிப்பகுதியானது அகன்றதுமாக ஒன்றோடொன்று அமைந்த சுமார் 6 உறைக்கிணறுகள் தெரிவதாகவும்,அதில் நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்ட வடிகுழாய் தென்படுவதாவும் தெரிவித்த வரலாற்று ஆர்வலர்கள் மேலும் இவையனைத்தையும் வைத்து பார்க்கும்போது நரிக்குடி அருகேயுள்ள தற்போதைய கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியில் விவசாயத்தை மேற்கொண்டு அக்கால சங்க காலத்து மக்கள் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்தது தெளிவாகிறதென உறுதிபட தெரிவித்தனர்.

    மேலும் கிருதுமால் ஆற்றுப்பகுதியின் மேற்பரப்பு பகுதியில் நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படும் மக்கள் கால மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டு அழிவை சந்தித்து இருக்கலாமென தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் தமிழக அரசானது இந்த கிருதுமால் நதியின் கிழக்குப்பகுதியிலுள்ள கரையின் மேற்பரப்பை முறையாக அகழாய்வு மேற்கொள்வதன் மூலம் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான பல புதிய தடயங்களையும், வாழ்வியல் ஆதாரங்களையும் வெளிக்கொண்டு வந்து சங்க கால வரலாற்றை பாதுகாத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும்,தமிழக தொழில்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனர்.

    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி