தமிழ் புத்தாண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி, பிரதோஷத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதத்தின் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி, சித்திரை மாதம் முதல் பிரதோஷத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள், நவகிரகங்கள், சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. எனக்கு தொடர்ந்து பக்தர்கள் அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மிகவும் பழமையான குரு சாபம் பெற்ற அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் தமிழ் புத்தாண்டையொட்டி மூலவர் சொக்கநாத சுவாமி பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுவதை யொட்டி 2022 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி தினமான இன்று இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள், தட்சிணாமூர்த்திக்கு ஒரே நேரத்தில் சந்தனம், பன்னீர், பால், இளநீர் என 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றன.
குருபகவானுக்கு பிடித்த மஞ்சள் நிறமுள்ள பட்டு அலங்கரிக்கப்பட்டு கொண்டக்கடலை மாலை அணிவிக்கப்பட்டு முல்லைப் பூ சுட்டி சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.
அதேபோல் தட்சிணாமூர்த்திக்கு பிடித்த வெண்ணிற பட்டு வில்வ மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பரிகாரம் செய்யக் கூடிய ராசிக்காரர்கள் நவகிரகங்கள் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அர்ச்சனை செய்து நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும் சித்திரை மாதம் முதல் பிரதோஷத்தை ஒட்டி தட்சிணாமூர்த்தி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.