விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நாலூர் கிராமத்தில் பசியில் தவித்த இரண்டு ஆட்டு குட்டிகளுக்கு தாயாக மாறி பாசமாக பால் கொடுத்த பசுவின் தாய் உள்ளத்தை கண்டு பொதுமக்கள் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகேயுள்ள நாலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான முத்து என்பவர் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் கடந்த மாதம் பிறந்த 20 நாட்களேயான 2 ஆட்டுக்குட்டிகளை புதியதாக வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் பசியின் காரணமாக சுற்றித்திரிந்த அந்த ஆட்டுக்குட்டிகள் முத்து வளர்த்து வரும் பசுவை தன்னுடைய தாயாக நினைத்து எந்தவித பயமுமின்றி அந்த பசுமாட்டிடம் பால் குடித்து வருகிறது.
இந்நிலையில் அந்த பசு மாடும் எங்கும் ஓடாமல் அதே இடத்தில் நின்று கொண்டு தன்னுடைய பிள்ளையாக நினைத்து பாசத்துடன் அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது. மேலும் அந்த ஆட்டுக்குட்டிகள் எப்பொழுது பால் குடிக்க வந்தாலும் மனம் கோணாமல் பாசத்துடன் இரண்டு ஆட்டு குட்டிகளுக்கும் அந்த பசுமாடு பால்கொடுத்து வருகிறது.
இச்செய்தியைக் அறிந்த கிராம மக்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் வாசிகள் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நிகழ்வை பெரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.