விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டீசல் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் போர்வெல் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பல்வேறு தரப்பினர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் 80க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இத்தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். டீசலை அதிகளவு நம்பியுள்ள இந்த தொழில் தற்போது டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மையமாக வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்திநகரில் டீசல் மற்றும் பி.வி.சி பைப் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வால் போர்வெல் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி மாவட்ட போர்வெல் வாகன உரிமையாளர் சங்கத்தினர் 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காந்திநகரில் போர்வெல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் முடிந்ததும் போர்வெல் கட்டணங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.