விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 5.000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழந்தைகளுடன் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார். உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்பகுதியில் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பொங்கல் விழாவையொட்டி பூக்குழி நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பூக்குழி மற்றும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.
சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. தென்காசி சாலை, அம்பல புளி பஜார் மற்றும் ஜவகர் மைதானம், மாதா கோவில் தெரு வழியாக மாரியம்மன் கோவில் பூக்குழி திடலை வந்தடைந்தனர். அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டு ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
கரகம், தீச்சட்டி மற்றும் பல்வேறு வேடமணிந்து நேர்த்திகடன் நிறைவேற்றினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் ரவி ராஜா தலைமையில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பூக்குழி திருவிழாவையொட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.