தொடர் மழை காரணமாகவும், லாரிகள் வராத காரணத்தினாலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பணகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையினால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே பணகுடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை வாணிப கழகத்திற்கு ஏற்றிச்செல்ல லாரிகள் வராததால் சுமார் 3,500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் பணகுடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது.இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நெல் மூடைகள் அனைத்தும் மழையில் நனைவதால் துர்நாற்றம் வீசி நெல்மணிகள் அனைத்தும் பாழாகி வருகிறது. மேலும் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லும் நெல்மூடைகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக மீண்டும் பொதுமக்களுக்கே விநியோகம் செய்யப்படும் சூழ்நிலையில் இவ்வாறு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூடைகளால் அரசு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாவட்டம் நிர்வாகம் நரிக்குடி ஒன்றியங்களிலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூடைகளை உடனடியாக வாணிப கழகத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.