42 வார்டுகளை உள்ளடக்கிய
விழுப்புரம் நகராட்சிக்கு சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்த வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 21 இடங்களில் ஆண்களும், 21 இடங்களில் பெண்களும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் 42 வார்டு உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.
இதன்பின் இன்று காலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவராக 29வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்ச்செல்வி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நகர்மன்றத் தலைவருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.இதை தொடர்ந்து மதியம் நகர்மன்ற துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது..
நூறாண்டுகளுக்குப் பிறகு விழுப்புரம் நகராட்சித் தலைவருக்கான பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நகர்மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளது விழுப்புரம் நகராட்சியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இதனை அடுத்து நகர்மன்றத் தலைவரின் பொறுப்பை இவர் எந்த அளவிற்கு கையாளப் போகிறார், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.