விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் சிமெண்ட் சாலை அமைக்க அரசால் 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சாலையே போடாமல் சாலை போட்டதாக கணக்கு காண்பித்து, அவ்வூரில் கல்வெட்டு வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஊர்மக்கள் மூன்று சிமெண்ட் சாலையை காணவில்லை என சுவரொட்டிகள் அடித்து ஊர் முழுவதும் விளம்பரப்படுத்தியுள்ளது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரிலுள்ள மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, தோப்பு தெரு, தொடர்ந்தனூர் ஒட்டு தெரு ஆகிய நான்கு தெருக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் போடுவதற்காக 2021-2022 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை திமுக கோலியனூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி தெய்வசிகாமணி எடுத்துள்ளார்.
இந்நிலையில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படாமலேயே நான்கு தெருக்களிலும் சிமெண்ட் சாலை போடப்பட்டதாக கல்வெட்டுகளை வைத்து திட்டமதிப்பீடு எவ்வளவு நாட்களில் முடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை போடாமல் எவ்வாறு போடப்பட்டதாக ஊராட்சி செயலாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் தனக்கு எதுவும் தெரியாது திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் ஒப்பந்தம் எடுத்தார் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், வடிவேல் தான் நடித்த பாடத்தில் \"என்னுடைய கிணறு காணவில்லை என காவல் துறையிடம் புகார் அளிப்பார் \" கிணறு வாங்குனதுக்கு என்னிடம் ரசீது உள்ளது போல, இவ்வூரிலும் போடாத சாலைக்கு போட்டதாக கல்வெட்டு வைத்துள்ளனர் அப்பகுதி கவுன்சிலர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் ஊரில் போட்டப்பட்ட மூன்று சிமெண்ட் சாலையை காணவில்லை என ஊர் முழுக்க சுவரொட்டிகள் அடித்து தெருக்களில் ஒட்டியுள்ளனர்.
சிமெண்ட் சாலை காணோம் என ஊர் பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.