Home /local-news /

பட்டுப்புழு வளர்ப்போருக்கு கை கொடுக்குமா தமிழக அரசு.. ஆந்திரா போல மானியம் வழங்க வலியுறுத்தல்..

பட்டுப்புழு வளர்ப்போருக்கு கை கொடுக்குமா தமிழக அரசு.. ஆந்திரா போல மானியம் வழங்க வலியுறுத்தல்..

பட்டுக்கூடு

பட்டுக்கூடு

Silkworm Breeders | தமிழ்நாட்டில் பட்டுக்கூடு வளர்ப்பு தொழில் தர்மபுரி, ஈரோடு,கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் அத்தியாவசிய பொருட்கள் பலவும் விலை உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை கொண்டு வந்துள்ளது.மேலும் உரத்தின் விலை அதிகரிப்பு காரணமாக பட்டுக்கூடு விவசாயம் நலிவடைந்து வருகிறது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புத்தகரம், சே.பேட்டை, கொம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மல்பரி விவசாயத்தின் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் பட்டுக்கூடு வளர்ப்பு தொழில் தர்மபுரி, ஈரோடு,கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தயார் செய்யப்படும் வெண்பட்டு மற்றும் மஞ்சள் பட்டுகள் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    பட்டுப்புழு வளர்ப்பிற்கு தேவையான மல்பரி இலையை 18 முதல் 20 நாட்களுக்கு தினமும் 2 வேளை பட்டுப் புழுக்களுக்கு உணவாக அளித்து, சீரான வெப்பநிலையில் பாதுகாத்து வரும்போது, பட்டுப்புழு கூடு கட்டும் நிலையை அடைகிறது. அதன் பின்னர் அடுத்த சில தினங்களில் சுமார் 2 கிராம் எடை உள்ள தரமான வெண்பட்டு கூடு கிடைக்கின்றது.

    அவற்றை அடுத்த ஒரு வாரத்திற்குள் பட்டு சந்தையில் விற்பனை செய்து விட வேண்டும்.அப்போதுதான் நல்ல விலைக்கு விற்க முடியும், இல்லையென்றால் அந்தக் கூட்டில் பட்டாம்பூச்சி உருவாகி வெளியேற ஆரம்பித்துவிடும். அப்படி மாறிவிட்டால், கூடு பயனற்றதாக மாறிவிடும்.

    மேலும்,வெண்பட்டு புழு வளர்ப்பில் ஈடுபட்டுவரும்,புத்தகரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜ்குமார்(32) கூறுகையில்.

    பட்டு வளர்ப்பு தொழிலை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.பட்டுப்புழு வளர்ப்பிற்க்கான இடத்தை(செட்) அமைக்க சுமார் 3 முதல் 4 லட்சம் வரை செலவு ஆகும். இந்த அமைப்பை ஒருமுறை தாயார் செய்துவிட்டால்,அடுத்த பதினைந்து முதல் இருபது ஆண்டுகளுக்கு அவற்றில் பட்டுப் புழுக்களை பாதுகாப்பான முறையில் வளர்க்கலாம்.

    ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மல்பரி இலையை சாகுபடி செய்ய சுமார் 10,000 முதல் 15,000 வரை செலவு ஆகிறது. 200 பட்டுப்புழு முட்டைகளை வாங்கும் செலவு மட்டும் ஐந்தாயிரம் வரை ஆகிறது.மாதம் ஒருமுறை பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டும், பராமரிப்பு வேலை பணியை நல்ல முறையில் பின்பற்றினால் நல்ல லாபம் கிடைக்கும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிலோ ஒன்றுக்கு வெண்பட்டு 500 முதல் 600 வரையிலும், மஞ்சள் பட்டு 300 முதல் 400 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு, பட்டுப்புழு உற்பத்தியில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.

    ஆனால்,தற்போது தர்மபுரி பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் தரமான வெண்பட்டு 200 முதல் 300 வரை மட்டுமே விலை போகிறது.இதனால் மல்பரி சாகுபடி பட்டு புழுவளர்ப்பில் நஷ்டம் ஏற்பட்டு,வேதனையாக இருக்கிறது.

    அதுவும் குறிப்பாக தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நேரடி விற்பனை ஏலம் என்பதால் பட்டு வியாபாரிகள் மட்டமான விலைக்கு பட்டுக் கூடுகளை கேட்பதால் வேறு வழி இல்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதால், பாதி அளவுதான் விலை கிடைக்கிறது.

    ஆனால் ஆந்திராவில் ஆன்லைன் மூலம் பட்டுக்கூடு விற்பனை ஏலம், நடைமுறையில் இருப்பதால் கிலோ ஒன்றுக்கு 600 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.கிலோ ஒன்றுக்கு ஆந்திர அரசு 50 ரூபாய் மானியம் வழங்கி பட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

    மேலும் ஆந்திராவிற்கு உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத்தால், தற்போதைய பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் சரக்கு வாகனங்களின் வாடகை செலவு இருமடங்கு ஆகிறது. அதுமட்டுமில்லாமல் மல்பரி தழைகளை பராமரிக்க உரத்தின் விலையும் இரு மடங்காக அதிகரித்து உள்ளது இதனால் எங்களைப்போன்ற பட்டுக்கூடு வளர்ப்பு விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளோம்.

    எனவே தமிழக அரசு நலிவடைந்து வரும் பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆந்திரா அரசு பட்டு விவசாயிகளுக்கு கிலோவிற்கு 50 ரூபாய் மானியம் வழங்குவது போல, தமிழக அரசும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தர்மபுரி பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் நேரடி விற்பனையை ரத்து செய்து, ஆன்லைன் விற்பனையைத் கொண்டுவரவேண்டும் என்றும், நலிந்து வரும் பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பட்டு விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

    எனவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி