கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் கையில் பதாகைகளை ஏந்தியும், பறை மேளம் அடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய மதுவினை ஒழிக்கும் விதமாக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நகர பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக நகரின் முக்கிய வீதிகளான நேருஜி சாலை, திருவிக வீதி, விழுப்புரம் புதுச்சேரி சாலையில் பேரணியாக சென்றனர்.
அப்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கியும் பறை அடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் மோகன், எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பள்ளி மாணவ மாணவிகள் கள்ளச்சாராயத்தை தவிர்க்குமாறு கள்ளச்சாராயம் ஒழிப்போம்!! நமது நாட்டு மக்களை காப்போம்!! அருந்திடாதே!! அருந்திடாதே!!கள்ள சாராயம் அருந்திடாதே!! விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.