விவசாய கிணற்றிற்கு மின் இணைப்பு வாங்கி தருவதாக போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் மண்ணென்னைய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த அம்புலுக்கை கிராமத்தை சார்ந்த சரஸ்வதி தனது கணவர் பெயரிலுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு அப்பகுதியிலுள்ள கிணற்று நீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாய கிணற்றை தனது கணவரின் அறியாமையை பயன்படுத்தி உறவினர் முருகன் என்பவர் கிணற்றுக்கு மின் இணைப்பு வாங்கித்தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டு அபகரித்துக் கொண்டதாகவும் இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கிணற்றை பயன்படுத்த கூடாது என மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தனது மகளுடன் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த நிலையில், திடீரென கையில் கொண்டுவந்த மண்ணென்னைய் கேனை எடுத்து தலையில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை மேற்கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.