விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெய்த மழையால் 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தது..
செஞ்சியில் பெய்த மழையால் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் மற்றும் வியாபாரிகள் நெல் மூட்டைகள் என சுமார் 1,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அப்பம்பட்டு, அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் செஞ்சி அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து நெல் மூட்டைகள் மற்றும் ஏற்கனவே இருந்த வியாபாரிகள் நெல் மூட்டைகள் என சுமார் 1,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால், விவசாயிகள் மீதமுள்ள நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்யக் கூடும் என வேதனை தெரிவித்தனர்.
இன்று காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டு வருவதால் மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
மேலும், ஒரு சில பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பெய்த இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.