ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவராகப் பணியாற்றி, தற்கொலை செய்து உயிரிழந்த அர்ச்சனா சர்மாவுக்கு அஞ்சலி செலுத்தியும், அவர் மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கையில் மெழுகுவர்த்தி ஏந்திய படி விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. அர்ச்சனா மகப்பேறு மருத்துவராக இருந்த வந்த நிலையில், மருத்துவமனையில் பிரசவத்திற்கு ஒரு பெண் வந்தார். அவருக்கு சிகிச்சை பார்க்கும் போது, அப்பெண் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், கர்ப்பிணியின் சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி, மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார்.
கர்ப்பிணியின் மரணத்திற்கு மருத்துவர் காரணமில்லை என்று கூறியும், எனவே தவறாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்தும், இந்திய மருத்துவ சங்கம் சார்பாக நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவர் அர்ச்சனாவின் புகைப்படத்தை பொருந்திய பதாகைகளை கையில் ஏந்திய படியும், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாக சென்றனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம், அர்ச்சனா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை மீது, உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மருத்துவர் வீட்டிற்குப் பொது இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மருத்துவருக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
அத்துடன் மருத்துவர்களை குற்றவாளியாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.