விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை, போதிய வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளி 1970 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக இருந்து வந்த நிலையில், தற்போது மேல்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையிலும் தொடக்கப் பள்ளியில் உள்ள அதே கட்டிடம் தான் காணப்படுகிறது. கூடுதலாக எந்த கட்டிடங்களும் இல்லை.
மேல்நிலைப்பள்ளிக்கு என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாதது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது.
6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு அமரக் கூட வகுப்பறைகள் இல்லை. அம்மாணவர்கள் மண் தரையில் அமர்ந்து படிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்க இருக்கும் மாணவர்களுக்கு ஆய்வக வசதிகள் என்று எதுவும் இல்லை, வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி பொதுத் தேர்வு இருக்கிற நிலையில், மாணவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சிகளை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
250 மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில் அடிப்படை வசதியான கழிவறை கூட இல்லை. இதனால் அருகே இருக்கக்கூடிய ஏரிக்கரை பகுதிக்குத்தான் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல வேண்டிய அவல நிலை நிலவி வருகிறது.
குடிநீர், கழிவறை,வகுப்பறை என எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியினை மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியர் மோகன் ஆய்வு:
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று காலை விழுப்புரம் பில்லூர் கிராமத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தையும் வகுப்பறைகளையும் சுற்றி பார்த்து, தலைமை ஆசிரியரிடம் இப்பள்ளிக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என விசாரித்தார், மேலும், மாணவர்களிடையே உள்ள குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் இப்பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மேலும், ஒரு மாதத்திற்குள் உடனடியாக கழிவறை கட்டித் தர உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்த கட்டமாக பள்ளி கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது கைதட்டல்கள் மூலம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.