விழுப்புரம் மாவட்டம் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பலத்த
மழையையும் வெள்ளப்பெருக்கையும் எதிர்கொண்டது. இந்த கனமழையால் பல உயிர் சேதங்கள் மற்றும் இன்னல்களை பொதுமக்கள் சந்திக்க நேரிட்டது.
அப்போது, மாவட்ட நிர்வாகமும் பல துறை அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு பேரிடரில் இருந்து பொதுமக்களை காப்பாற்றினர். விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ( 36). தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் குறைந்தப்பட்சம் 16 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு பெய்த கன மழையில் நடக்க இருந்த இரண்டு விபரீத சம்பவங்களை தடுத்து நிறுத்தினார். அதாவது,கன மழையால் விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூர் வழியில் உள்ள மணம்பூண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கில் 8 நபர்கள் சிக்கிக்கொண்டனர் அவர்களை மீட்கும் குழுவிலும் ராஜீவ்காந்தி செயல்பட்டார்.
மேலும் மலட்டாறுக்கு - தென்பெண்ணை ஆற்றுக்கு நடுவில் உள்ள கரைப்பகுதியில் இரண்டு வாலிபர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை 5 நபர்கள் கொண்ட குழு விரைந்து சென்று காப்பாற்ற முற்பட்டது. அதிவேகமாக செல்லும் அந்த வெள்ளப் பெருக்கில் விரைந்து வேகமாக மீட்பு படகினை ஓட்டிச் சென்று அந்த இரண்டு வாலிபர்களையும் காப்பாற்ற முயன்றார் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தியுடன் சுந்தரமூர்த்தி, பண்டாரி, முருகதாஸ் ஆகிய தீயணைப்பு வீரர்களும் இருந்தார்கள்.
இந்த வெள்ளப் பெருக்கின் வேகம் அதிகரித்ததால் போட் ஓட்டுவதற்கு சக தீயணைப்பு வீரர்கள் தயங்கிய நிலையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, நிலைய அலுவலர் முகுந்தன் ஆகிய அதிகாரிகள் கொடுத்த தைரியத்தில் ராஜீவ்காந்தி அந்த ஆற்றில் ஏற்பட்ட பலத்த வெள்ளப்பெருக்கில் இருந்து மீட்புப் படகினை ஓட்டி சென்று அந்த இரண்டு வாலிபர்களை காப்பாற்றினார்.
இந்த வீர தீரச் செயலைப் பாராட்டி ராஜீவ் காந்திக்கு அண்ணா பதக்கத்தினை சென்னை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையால் வழங்கப்பட்டது. மேலும் இந்த வீர தீர செயலைப் பாராட்டி ராஜீவ் காந்திக்கு ஒரு லட்ச ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது. இதுபோன்ற கடின உழைப்பிற்கும், வீரர்கள் எடுக்கும் வீரதீர செயல்களைப் பாராட்டில் ஊக்குவித்த அரசாங்கத்திற்கு தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.
மேலும் இதுபோன்ற ஊக்குவிப்பு தங்களைப்போன்ற வீரர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்றும் பொதுமக்கள் அரசாங்கம் கூறும் எந்த ஒரு தடைவிதித்த பகுதிகளுக்கு செல்லாமல், அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.