Home /local-news /

பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்ய பெண்களுக்கு பயிற்சி..

பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்ய பெண்களுக்கு பயிற்சி..

பனை

பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்ய பெண்களுக்கு பயிற்சி..

Villupuram | தற்போது பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பனையோலை பொருட்களுக்கு தேவை அதிகமாக இருந்தாலும் உற்பத்தி குறைவாக இருக்கிறது என பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

    மூங்கிலால் ஆன கைவினை பொருட்கள், மண்ணாலான கைவினைப் பொருட்கள், போன்றவை போல பனையோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களும் அதிக அளவில் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    பனை ஓலையில் செய்யப்படும் அழகு நிறைந்த கலைப் பொருட்களுக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. அவை மக்களுக்கு அத்தியாவசியமாக பயன்படவும் செய்கிறது.கண்களைக் கவரும் இந்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

    பனையோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட நல்ல வரவேற்பு உள்ளது.பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துக் கையால் செய்யப்படும் ஓலைப் பெட்டிகளை அதிகம் பயன்படுத்தினால், நலிவடைந்துவரும் பனைப் பொருள் தொழிலுக்குப் புத்துயிர் கிடைக்கும், சுற்றுச்சூழலும் சீர்கெடாமல் பாதுகாக்கப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    அதுபோல விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமத்தில், பனங்காடு எனுமிடத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், சமுதாய திறன் பள்ளி மூலம் பெண்களுக்கு பனையோலை பின்னல் தொழிற்பயிற்சி வகுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பனை ஓலை பயிற்சி அளிக்க பயிற்றுநராக பார்த்தசாரதி (திருவண்ணாமலை), தமிழ்பாரதி (திருவள்ளுவர் ) என இருவரும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்து இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு இந்த பனை ஓலை பின்னல் பயிற்சி நடத்துகிறார்கள். காலை 9: 30 தொடங்கி மாலை 5:30 வரை, இரண்டு குழுக்களாகப் பிரிந்து காலை 15 நபருக்கும் , மாலை 15 நபருக்கும் கற்றுத்தரப்படுகிறது.

    இந்தப் பயிற்சி வகுப்பில் பனை ஓலைகளில் எப்படி கைவினைப் பொருட்கள் செய்வது, அதனை எப்படி விற்பனை செய்வது போன்றவையும் சொல்லித் தரப்படுகிறது. இந்த கைவினை பொருட்களுக்கு பயன்படும் பனை ஓலைகள், தேவையில்லை என வெட்டிவிடும் ஓலைகளை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.

    மேலும் ஒரு சிலர் பனை ஓலையில் கைவினைப் பொருட்களை பனை மரத்தின் குருத்து ஓலையை செய்கிறார்கள். பனை மரத்தின் குருத்து ஓலையை பயன்படுத்தினால், பனைமரம் வளர்ச்சி அடையாமல் பாதிப்படைந்துவிடும் எனவே பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்ய அவர்கள் கண்டிப்பாக குருத்தோலை (பச்சை ஓலை) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பயிற்றுனர்கள் கூறினார்கள்.

    இங்கு பனை ஓலைகளைக் கொண்டு குடுவை, செவ்வகப்பெட்டி, வாட்டர் பாட்டில் பவுச், கீ செயின், கம்மல்,வளையல், விசிறி, ஸ்கூல் பேக், பர்ஸ், அஞ்சறைப்பெட்டி, மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் இந்த பனை ஓலை கொண்டு தயாரிக்கப்படுகிறது .இங்கு தயாரிக்கப்படும் பொருள் 10 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை விலை போகக்கூடியதாகும்.

    தற்போது பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பனையோலை பொருட்களுக்கு தேவை அதிகமாக இருந்தாலும் உற்பத்தி குறைவாக இருக்கிறது என பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

    இது போன்ற பனையோலைக் கைவினைப் பொருட்களைச் செய்வதற்குச் சுய உதவிக் குழு பெண்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் அனைவரும் பயிற்சி பெற்று, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து பனை ஓலையின் தேவையையும் நன்மையையும் எடுத்துரைத்து இதில் நல்ல முயற்சி எடுத்தால் நிச்சயமாக அனைவரும் வீட்டில் இருந்தபடி ஒரு சிறந்த தொழில் முனைவோராக வரலாம் என அப்பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி