கலை பண்பாட்டுத் துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாணையின்படி குரலிசை, கருவியிசை,பரதநாட்டியம், கிராமிய நடனம மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளில் விழுப்புரம் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி (நகராட்சி விளையாட்டுத் திடல் வளாகத்தில் 23.04.2022 நடைபெறுகிறது.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் 5 போட்டிகள் காலை 10.00 மணிக்கும் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.
தனிநபராக குரலிசைப் போட்டியிலும்,நாதசுரம் வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம்,கோட்டுவாத்தியம், மாண்டலின்,கிதார்,சாக்சபோன், கிளார்நெட் போன்ற கருவி இசைப் போட்டியிலும் 5 வர்ணங்கள் இராகம், சுரத்துடன் 5 தமிழ்ப்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இணைஞர்கள் பங்கு பெறலாம்.
தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம்,மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்றலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம்,புரவியாட்டம், காளையாட்டம்,மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம்,புலியாட்டம்,தப்பாட்டம் (பறையாட்டம்),மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும்.
இப்போட்டிக்கு அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளம் www.artandcultute@tn.gov.in வாயிலாக பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூர் மண்டலத்தின் 04362232252 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாய்ப்பினை கலைத் திறன் மிக்க விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.