Home /local-news /

சிப்பி காளான் வளர்ப்பில் மாதம் ரூ.40,000 சம்பாதித்து அசத்தும் குடும்ப பெண் சண்முகப்பிரியா!

சிப்பி காளான் வளர்ப்பில் மாதம் ரூ.40,000 சம்பாதித்து அசத்தும் குடும்ப பெண் சண்முகப்பிரியா!

Shanmugapriya

Shanmugapriya earns Rs. 40,000 per month in oyster mushroom cultivation!

Villupuram : சிப்பி காளான் வளர்ப்பு முறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்மணி சண்முகப்பிரியா. உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளியூர்களிலும் விற்பனை செய்யவேண்டும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறும் நம்பிக்கை பெண்மணி.

  சிப்பி காளான் வளர்ப்பு முறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்மணி சண்முகப்பிரியா. உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளியூர்களிலும் விற்பனை செய்யவேண்டும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறும் நம்பிக்கை பெண்மணி.

  தோட்டத்தில் இயற்கையாக முளைக்கும் காளான் துண்டுகளை ஆய்வுக்கூடங்களில் காளான் விதைகளாக மாற்றுகின்றனர். அவ்விதைகளை பண்ணைகளில் வைக்கோலை வைத்து காளான்களாக உற்பத்தி செய்து, அதனை சந்தைப்படுத்தப்படுகிறது.

  விவசாயத்தில் லாபம் தரக்கூடிய முக்கிய காரணிகளாக காளான் உற்பத்தியும் உள்ளது. இதற்காக தமிழ்நாடு வேளாண் துறை சார்பாக விவசாயிகள் மத்தியில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், காளான் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செயல்முறை விளக்கமும் அளித்து சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

  அதுமட்டுமில்லாமல் வீடுகளில் குறைவான முதலீட்டில் காளான் வளர்ப்புகளை பெண்கள் சிறிய அளவிலேயே காளான் பண்ணைகளை வீட்டில் அமைத்து, தங்கள் பகுதிகளில் மட்டுமே சந்தைப்படுத்தி வருகின்றனர்.

  அதுபோல, விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில், இந்தியன் சுய ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சண்முகப்பிரியா என்ற பெண்மணி சிற்பி காளான் வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் காளான் வளர்ப்பு முறையை பற்றி சண்முகப்பிரியா(33) கூறுகையில், என்னுடைய சொந்த ஊர் வளவனூர் ஆகும். எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது . எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை . நான் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் .

  என்னுடைய கணவர் பைனான்ஸ் பிசினஸ் செய்து வருகிறார் . எனக்கு திருமண ஆனதுக்கப்புறம் கைத்தொழில் ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்ற நோக்கம் இருந்தது . எவ்வளவோ பெண்கள் எத்தனையோ பிசினஸ் செய்கிறார்கள் .

  இது போன்ற பிசினஸில் நாம் தனித்துவமான இடத்தை பிடிக்க வேண்டுமென என்ற நோக்கத்தில் நான் இந்த காளான் வளர்ப்பை கையில் எடுத்துக் கொண்டேன். எனக்கு குடும்ப ஆதரவு நல்ல முறையில் கிடைத்ததால் நான் வெற்றிகரமாக நான்கு வருடம் செய்து வந்தேன். இடையில் கொரோனா தொற்றால் நிறுத்திவிட்டேன். இங்கு மறுபடியும் ஆரம்பித்துள்ளேன்.

  நான் இந்தியன் ஊரக வங்கி மூலம் பயிற்சி பெற்றேன். என்னுடைய பயிற்சியாளர் மணிவேலன் (திண்டிவனம் )ஐயா ஆவார். பொதுமக்கள் பல பேருக்கு காளான் என்றால் மொட்டு காளான் தவிர வேறு எந்த காளானும் தெரியாது. ஆனால் அதையும் தாண்டி பல காளான் வகைகள் உள்ளது. அதில் சிற்பி போன்ற வடிவத்தைக் கொண்டதால், இக் காளானுக்கு சிப்பி காளான் என்று பெயர் வந்துள்ளது.

  தற்போது சிப்பிக்காளான் சாகுபடியில் பல பேர் களமிறங்கி உள்ளனர். அதுபோல நான் 300 சதுர அடியில் சிப்பி காளான் வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கான விதை பாக்கெட்டுகளை கோயம்புத்தூரில் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன். ஒரு பாக்கெட்டின் விலை 38 ரூபாய் ஆகும்.

  ஒரு விதை பாக்கெட்டிலிருந்து ஒரு காளான் மெத்தை (காளான் பெட் ) தயார் செய்யலாம். சிப்பிக்காளான் தயாரிப்பு முறை தலையணை போன்ற வடிவில் தான் இருக்கும். இந்த சிப்பி காளான் மெத்தை தயார் செய்வதற்கு, காளான் கவர் ( பிளாஸ்டிக் கவர் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ), வைக்கோல், காளான் விதை, ரப்பர் பேண்ட் போதும். மொத்த செலவில் நமக்கு 50 ரூபாய்தான் ஆகும்.

  முதலில் வைக்கோல் பாதி அளவு ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். பின்னர் இந்த வைக்கோலில் ஒரு பாலிதீன் கவருக்குள் கொஞ்சமாக செலுத்த வேண்டும். அதன் மீது கொஞ்சம் காளான் விதைகளை போட வேண்டும். பின்னர் மேலும் அதன் மீது வைக்கோல் வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுக்கமாக ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்ட வேண்டும். பின்னர் அதில் சிறு சிறு துளையாக 12 துளைகள் போட வேண்டும். பின்னர் கிருமி நாசினி கொண்ட பஞ்சினால் அந்த கவர் மீது தேய்க்கவேண்டும்.

  இந்த கவர் பாக்கெட்களை ஒரு கயிற்றினால் கட்டி தொங்க விடலாம் அல்லது ஒரு இடத்தில் வைத்தும் காளான்களை வளர்க்கலாம். மேலும், இந்த காளான்களை சுற்றி 25 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருக்கவேண்டும். காளான்கள் முளைக்கும் வரை ஒவ்வொரு நாளும் 4-5 முறை தண்ணீரை அதன் மீது தெளிக்க வேண்டும். 28 நாட்களில் காளான் வெளியே வர ஆரம்பிக்கும். அதற்கு பிறகு இரண்டு நாள் கழித்து ஒரு சிற்பி போல் காட்சியளிக்கும் காளான் ஆக இருக்கும். அதன் பின்னர் அதை கையால் சுழற்றி பறிக்கவேண்டும்.

  அதன்பின் ஒவ்வொரு இழைகளாக பறித்து பாக்கெட் செய்ய வேண்டும். ஒரு காளான் மெத்தையின் ஆயுட்காலம் 45 நாட்கள் ஆகும் . ஒரு காளான் மெத்தையிலிருந்து 4 முறை மகசூல் பெறலாம். இடத்திற்கு ஏற்றவாறு காளான் மெத்தையை அமைக்கலாம்.

  நான் என்னிடம் வளர்ந்த காளானை 1.35 கிராம் எடை கொண்ட காளான் பாக்கெட்டுகளை 35 - 40 ரூபாய்க்கு உள்ளூர்களில் விற்பனை செய்து வருகிறேன். ஒரு கிலோ சிப்பிக்காளான் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. நாம் இந்த வளர்ப்பு முறையில் இருந்து ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

  வீட்டில் இருக்கும் பெண்மணிகள் இதுபோன்ற கைத்தொழிலை கையில் எடுத்துக்கொண்டால் வீட்டிலிருந்தபடியே நல்ல லாபத்தை பெறலாம். எனக்கு இந்த காளான் வளர்ப்பு முறையில் அதிக அளவில் மகசூலை ஈட்டி உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளி ஊர்களிலும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும் என முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் சண்முகப்பிரியா.

  செய்தியாளர் : சு. பூஜா -விழுப்புரம்
  Published by:Suresh V
  First published:

  Tags: Mushroom Cultivation, Villupuram

  அடுத்த செய்தி