தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவர்களின் வயதுவரம்பு 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது 1,00,000 ரூபாய், சான்றிதழ் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு வருகிற 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
எனவே இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.inமூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2022 அன்று மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகள்: 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்,பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2022 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.(சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
மத்திய,மாநில அரசுகள்பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். போன்ற பல தகுதியின் அடிப்படையில் விருது வழங்கப்பட உள்ளது எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.