விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தமிழகத்தில்
தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் மரக்காணம் விளங்குகிறது.
இதில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து அண்டை மாநிலங்களான புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவுக்காகவே பயன் படுத்தப்படுகிறது. இத்தொழிலை நம்பி இப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரையில் நடைபெறும் .
ஆனால் கடந்த 2 மாதத்துக்கு முன் பெய்த மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் கடல் நீர்,கால்வாய் வழியாக புகுந்ததில் உப்பளங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இதனால் உப்பு உற்பத்தி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உப்பு உற்பத்தி செய்வதற்கான முதல் கட்டப் பணிகளான பாத்திக்கள் அமைத்தல், கால்வாய்கள் அமைத்தல் மற்றும் உப்பு பாத்திக்களை பதப்படுத்துதல் ஆகிய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் .
தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து உப்பு உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
தற்போது வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மாதத்திலேயே கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . கோடைகாலமான மே மாதத்தில் இதைவிட இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் உப்பளங்களில் உப்பு தயாரிப்பு அமோகமாக நடைபெற்று வருகிறது .தற்போது 100 கிலோ கொண்ட ஒரு உப்பு மூட்டையின் விலை ரூ 300 முதல் ரூ 500 வரையில் விற்பனையாகிறது.உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.