மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை துவக்கி வைத்து,ஒருவர் கூட விடுபடாத வகையில் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையினை எடுத்துக்கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தி உள்ளார்.
நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க வாரம் 14.03.2022 முதல் 19.03.2022 வரை திங்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் நடைபெற அரசு உத்தரவிட்டு அதன் அடிப்படையில் இம்முகாம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. இம்முகாம் ஒருவார காலம் நடைபெறுகிறது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் கடந்த காலங்களில் 6 மாத குழந்தை முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டு வந்த நிலையில்,இந்த ஆண்டு 19 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) அல்பெண்டசோல் மாத்திரை தேசிய குடற்புழு நீக்க தினத்தில் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 1,821 அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் 366 துணை சுகாதார மையங்களிலும் 6 மாத குழந்தை முதல் 19 வயதுக்குட்பட்ட 6,80,829 குழந்தைகள் மற்றும் 1,62,341 (19 - 30 வயதிற்குட்பட்ட பெண்கள்) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படுகின்றன.
மேலும் பள்ளி செல்லாதகுழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் 6 மாத குழந்தை முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மிலி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் 20 - 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் 400 மிலி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது.
குடற் புழுத்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான,ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஊட்டத்சத்து அடங்கிய பழங்கள் , காய்கறிகள் , கீரை வகைகள் போன்றவற்றின் சத்துக்கள், நன்மைகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.