தமிழகத்தில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சுப நிகழ்சிகள் தொடங்கி கட்சி விளம்பரங்கள் வரையிலும் அனைத்தும் டிஜிட்டல் Flex கலாச்சாரமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், டிஜிட்டல் பேனர் கலாசாரத்தால் சுவர் ஓவியர்களின் வாழ்வாதரம் ஒருபக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பாக அமைந்துள்ளது.
சுவர் ஓவியங்களுக்கு அரசியல் கட்சிகள்தான் முக்கிய வாழ்வாதாரம் அளித்து வருகிறது. கட்சிகளின் மாநாடு, தலைவர்களின் பிறந்தநாள், தேர்தல் என கட்சிகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் பொது சுவர்களில் தான் வரையப்படும் . அரிய வகை படங்கள், எழுத்துக்கள் என விளம்பரங்கள் என அனைத்தும் சாலை ஓரம் உள்ள சுவர்களிலும், மேம்பாலங்களிலும் நாம் பார்க்கலாம்.
ஆனால் தற்போது அது போன்ற நிலைமை ஏதுமில்லை. கடந்த 10 வருடங்களாக சுவர் ஓவியம் வரைவதில் பெரிய அடி. காரணம் டிஜிட்டல் பேனர்கள், ஸ்டிக்கர்கள் மாறிமாறி வர ஆரம்பித்தவுடனே சுத்தமாக வேலை இல்லாது போய்டுச்சி. இருந்தாலும் மாதத்திற்கு ஒரு ஆர்டர் என வருகிறது .
இந்த நிலையில் 33 ஆண்டுகளாக ஓவியத்தொழில் ஈடுபட்டு வரும் பாட்ஷா கூறுகையில், முந்தைய காலத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுவரோவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் தற்போது இந்த பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அதிக அளவில் வருமானம் கிடைப்பதில்லை, ஆர்டர்கள் கிடைப்பதில்லை. நாங்கள் கடும் வெயிலிலும் மழையிலும், இரவு பகல் பாராது நின்று கொண்டு பல ஓவியங்களையும் பெயர்களையும் எழுதுகிறோம் ஆனால் எங்களுக்கு என சரியான வருமானம் கிடைப்பதில்லை இந்த தொழிலில். இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அரசாங்கம் எங்களுக்கு தரும் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எங்களால் குடும்பத்தை நடத்த முடியும் என கூறுகிறார் ஓவியர் பாட்ஷா.
மேலும், இதுக்கு ஒரே வழி கவர்மெண்ட் ஸ்டிக்கர், டிஜிட்டல் பேனர் எல்லாத்தையும் எடுத்துட்டு பழையபடி ஓவியர்களை வச்சி பெயிண்ட், சுண்ணாம்பு மூலமா எழுதுவது தான் ஒரே வழி அப்பதான் எங்களை போல குடும்பங்களும் பொழைக்கும்'' என்றார்.
ஓவியத்தைப் பார்த்து ரசித்த நம் மக்களுக்கு அந்த ஓவியரின் வலி புரிவதில்லை என கவலையுடன் கூறுகிறார்கள் ஓவியர்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.