விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்கான வகுப்புகள் நடைபெற்றது இல்லை. இதுவே முதன்முறையாகும்.
விழுப்புரம் கே கே ரோடு அடுத்த ராஜீவ் காந்தி நகரில் வி ராக் ஹார்ஸ் ரைடிங் ஸ்கூல் ( V ROCK HORSE RIDING SCHOOL ) மே 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் குதிரை பந்தயம் பற்றியும் குதிரை பந்தய வீரர்களை பற்றியும் அதிகளவில் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது சதாம் என்ற இளைஞர் இந்த வகுப்பை தொடங்கியுள்ளார்.
இந்த ஹார்ஸ் ரைடிங் ஸ்கூலின் உரிமையாளரான சதாம், பயிற்சியாளரான குகன், ஆகாஷ் என இருவரும் வகுப்புக்கு வருகைபுரிந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த குதிரை பயிற்சி வகுப்பில் சில்வர்,ராக், கலீப், ஜாவா என மொத்தம் 6 குதிரைகள் உள்ளன. ஆறு வயது முதல் 60 வயதுடைய நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். தற்போது இந்த குதிரைப்பந்தய வகுப்பிற்கு அதிக அளவில் சிறுவர்கள் வருகை புரிகிறார்கள்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பு பற்றி உரிமையாளர் சதாம் கூறுகையில், எனக்கு சிறுவயது முதலே ஹார்ஸ் ரைடிங் பிடிக்கும். குதிரை பந்தயத்தில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வகுப்பை தொடங்கி உள்ளேன். இந்த வகுப்பிற்கான குதிரைகளை வடமாநிலங்களில் இருந்து கொண்டு வந்துள்ளோம், மேலும் சென்னை போன்ற பகுதியில் இருந்தும் குதிரைகள் வருகை புரிந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் குதிரை பந்தயம் மற்றும் குதிரை பந்தய வீரர்களை உருவாக்குவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனை கருத்தில் கொண்டு நான் முதன்முதலாக விழுப்புரம் மாவட்டத்தில் குதிரைப்பந்தய ஸ்கூல் ஆரம்பித்துள்ளேன். முதலில் எதிர்பார்த்த அளவிற்கு மாணவர்கள் வருகை இருக்கவில்லை, ஆனால் தற்போது 10 மாணவர்களுக்கு மேல் வகுப்பிற்கு வருகிறார்கள். இந்த குதிரை பந்தய வகுப்பிற்கான ஒரே நோக்கம் தேசிய அளவில் குதிரை பந்தய வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதேயாகும் என ஸ்கூலின் உரிமையாளர் சதாம் கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.