விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை அருகே அமைந்துள்ளது ஆதிகான்புரவடை கிராமம். 41 அடி உயரமுள்ள ஸ்ரீ சர்வசக்தி, காளியம்மன் ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையான முழு ஊரடங்கு நாளில் நடைபெற்றது.
இதனுடன் பரிவார மூர்த்திகளுக்கும் பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது.ஆகம விதிப்படி ஹோம குண்டங்கள் அமைத்து மகா கும்பாபிஷேக அஷ்டபந்தன விழா நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் ஏற்பாடு செய்திருந்தார்.
பாதுகாப்பு பணியில் அவலூர்பேட்டை போலீசார் ஈடுபட்டனர். ஊரடங்கு காலத்தில் ஒரே இடத்தில் ஒன்று கூடக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கொரோனா பரவும் விதமாக கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் கட்டுப்படுத்தாமல் ஏன் இவ்வளவு கூட்டம் கூடினீர்கள் என்று மைக்கில் மட்டும் பேசியுள்ளார்கள்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதனால், அப்பகுதியில் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பயமில்லாமல் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் சண்முககனியிடம் நாம் கேட்டபோது, \"முழு ஊரடங்கில் நடந்த இந்த கும்பாபிஷேகத்திற்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். சுகாதாரதுறைக்கு இது சம்மந்தம் இல்லை. சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்துவது, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்\" என விளக்கமளித்தார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.