கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பாக, மகளிர் சுய உதவிக்குழுவினர் வாயிலாக பல்வேறு விதமான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள், விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். ஊட்டச்சத்து மிக்க பல்வேறு உணவுகளை சமைத்து ஒவ்வொரு உணவு வகைகளிலும் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பது குறித்து விளக்கம் தரப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளும் நடைபெற்றது.
இந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 ஒன்றியங்களின் கீழ் செயல்படும் அனைத்து பஞ்சாயத்துகளும் கலந்து கொண்டது.
கானை, கோலியனூர், வல்லம், திருவெண்ணைநல்லூர், வானூர், மரக்காணம், செஞ்சி, விக்ரவாண்டி, மயிலம், முகையூர், மலையனூர், ஒலக்கூர், கண்டமங்கலம் ஆகிய 13 ஒன்றியங்களின் கீழ் 26 குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.
மூன்று பிரிவாக உணவு கண்காட்சியும் நடத்தப்பட்டது. முதலில் மூன்று வயது உடைய குழந்தைகளுக்கு, ரத்த சோகை சம்பந்தப்பட்டவர்களுக்கு, திருமணமானவர்களுக்கு என தனித்தனியாக உணவுகள் சமைத்து அதில் உள்ள சத்துகளை பற்றி விளக்கிக் கூறினார்கள்.
மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுவதுடன் இது போன்ற விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்பது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர், மற்றும் மகளிர் திட்ட அலுவலகத்தின் அனைத்து உதவி திட்ட அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.