கடற்பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசாணையின் படி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவ கிராமத்தினர்கள் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தவுள்ள, மீனவ கிராமத்தினர் மற்றும் சுருக்குமடி மீன்பிடி படகு உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
எனவே, கிராம மக்களுக்கு சுருக்குமடி வலையினைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்திடவும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் சுருக்குமடி தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அறிவுறுத்தப்பட்ட மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.